அன்னமாகி அருமறை பயந்தவன்

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருவெள்ளறை

பாசுர எண்: 0
பெரிய திருமொழி : 3

முன்னிவ் வேழுல குணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுதேத்த*
அன்ன மாகியன் றருமறை பயந்தவனே ! எனக் கருள்புரியே *
மன்னு கேதகை சூதக மென்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள்*
தென்ன என்னவண் டின்னிசை முரல்திரு வெள்ளறை நின்றானே !
(பெரிய திருமொழி - 5.3.8)

முன் இவ்வேழுலகு உணர்வின்றி இருள்மிக உம்பர்கள் தொழுது ஏத்த
அன்னம் ஆகி அன்று அருமறை பயந்தவனே ! எனக்கு அருள் புரியே
மன்னு கேதகை சூதகம் என்றிவை வனத்திடைச் சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே !

(பெரிய திருமொழி  5-3-8)

[பொருள்]

தாழைகளும், மாமரங்களும் நிறைந்த சோலைகளின் இடையே வண்டுகள் "தென்னா தெனா" என்று இன்னிசை மீட்டும் திருவெள்ளறையில் நின்ற பெருமானே ! முன்பு ஒரு சமயம், இந்த ஏழு உலகங்களும் உணர்வு ஒன்றும் இல்லாது, (பகவானைப் பற்றிய ஞானம் மங்கியதால்) இருளில் ஆழ்ந்திருக்க, வானோர்கள் அனைவரும் அந்த இருளை நீக்குமாறு உன்னை வணங்கி வேண்டினர். அன்று உயிரினங்கள் உய்யும்படி, அன்னமாகத் தோன்றி, அரிய வேதங்களை பிரம்மதேவருக்கு வெளியிட்டவனே ! எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.

(சொற்பொருள்)

உம்பர்கள் - தேவர்கள்; வானோர்
மன்னுதல் - மிகுந்திருத்தல்;
கேதகை - தாழை
சூதகம் - மாமரம்
சுரும்பு - ஒரு வகை வண்டினம்
முரல் - ஒலி; கலப்போசை
பயத்தல் - கொடுத்தல்; படைத்தல்;

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com