திருவுக்கும் திருவாகிய செல்வா !

திருவுக்கும் திருவாகிய செல்வா !
தெய்வத்துக்கரசே ! செய்யகண்ணா !
உருவச் செஞ்சுடராழி வல்லானே !
உலகுண்ட ஒருவா ! திருமார்பா !
ஒருவற்காற்றி உய்யும்வகை என்றால்
உடனின்றைவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிடவஞ்சி நின்னடைந்தேன்,
அழுந்தூர் மேல்திசை நின்றவம்மானே.
(பெரிய திருமொழி - 7-7-1)

[பொருள்]

எல்லா உயிர்களுக்கும் தாயாக இருந்து எப்பொழுதும் மங்களமே செய்யும் திருமகள் பிராட்டி உகந்து கொண்டாடும் மங்களகரமானவனே ! திருமகள் செல்வனே ! தெய்வங்களுக்கு எல்லாம் தலைவனே ! சிவந்த அழகிய திருக்கண்களை உடையவனே ! அழகிய வடிவை உடையதும் செம்மையான சுடர்கள் வீசுவதுமான சக்கரத்தைக் கையில் தரித்திருப்பவனே ! பிரளய காலத்தில் உலகங்களை உண்ட ஒப்பற்றவனே ! கருணைக் கடலான மகாலட்சுமி பிராட்டியை மார்பில் தரித்தவனே !

அடியேன் ஒரே ஒரு இந்திரியத்திற்கு குறை தீர்த்துவிட்டு உய்யும் காலம் எந்நாளோ ? அறியேன் !  மிகவும் வருந்துகிறேன். ஐந்து இந்திரியங்களும் என்னை ஒருக் கணமும் ஒழியாது அலைக்கழிக்கின்றனவே. அவற்றுக்கு அஞ்சி உன்னைச் சரணடைந்தேன். திருவழுந்தூரில் மேற்கு திசையில் நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்மானே ! அருள் செய்து காக்க வேண்டும்.

(சொற்பொருள்)

திரு - செல்வம், மங்களம், மங்களங்களே அருளும் திருமகள்.
மேல் திசை - மேற்கு திசை
அம்மான் - கடவுள், இறைவன்
ஆல் - வருத்தம்
அருவித் தின்றிட - அலைத்து நெருக்க

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com