அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 6
தாவளந்துலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு
நாவளம் நவின்றங்கேத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் !
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடிமேய கண்ணனே ! களைக்கணீயே.
(பெரிய திருமொழி - 4.6.1)
தாவளந்து உலகம் முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு
நாவளம் நவின்று அங்கு ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் !
மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக்
காவளம்பாடி மேய கண்ணனே ! களைக்கண் நீயே.
(பெரிய திருமொழி - 4.6.1)
thaavalandhu ulagam muttrum thadamalar poigai pukku
naavalam navinru angu yetha naagaththin nadukkam theerththaai
maavalam perugi mannum maraiyavar vaazhum naangai
kaavalampaadi meya kannane ! kalaikkan neeye.
(Periya Thirumozhi - 4.6.1)
O,Krishna ! You took the whole earth in one stride. You entered the lotus tank and saved the chanting devotee elephant ! You reside with knowledge-wealthy Vedic seers in Nangur's Kavalampadi. You are my sole refuge !
திருமகள் அருளினைப் பூரணமாகப் பெற்ற 'வேதம் ஓதுபவர்கள்' நிறைந்து வாழும் நாங்கை(திருநாங்கூர்) காவளம்பாடி திவ்ய தேசத்தில் எழுந்தருளி இருக்கும் கண்ணனே ! முன்னர் ஒரு சமயம், திரிவிக்ரம அவதாரத்தில் உலகம் முற்றும் தாவி அளந்து பெரும் பராக்கிரமத்தை வெளியிட்டாய். மற்றொரு சமயம், உனக்கு பூஜை செய்ய ஏற்ற தாமரை மலரினைப் பறிப்பதற்காக பொய்கையில் இறங்கிய கஜேந்திரன் என்னும் யானை, அந்தப் பொய்கை வாழ் முதலையிடம் சிக்கி, தன்னால் தன்னை காத்துக் கொள்ள இயலாமையை உணர்ந்து நடுக்கமுற்று, தன் நாவினால் "ஆதிமூலமே ! நாராயணாவோ !" என்று அலற, உடனே அதற்கு அபயம் அளித்தாய். இவ்வாறு உயிர்களைக் காப்பதற்கு வேண்டிய அளப்பரிய ஆற்றலும், உயிர்களிடத்து கருணையும் ஒருங்கே அமைந்த நீயே எனக்கு அடைக்கலம் !
தாவளந்து - தாவி அளந்து
தடமலர் - பெரிய மலர் (அகன்ற தாமரை)
புக்கு - புகுந்து
நாவளம் நவின்று - நாவிற்கு வளம்/அலங்காரம் தரும் சொற்களைச் சொல்லி
ஏத்த - போற்ற
நாகம் - யானை (இங்கு கஜேந்திர ஆழ்வான்)
மா - திருமகள், பெரிய, அதிக, பெருமை
களைக்கண் - பற்றுக்கோடு, அடைக்கலம், சரண்
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com