அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்

தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்

கானகம் படி உலாவி உலாவிக்

கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது,

மேனகையொடு திலோத்தமை அரம்பை

உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி

வானகம் படியில் வாய் திறப்பு இன்றி

ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

முன் நரசிங்கமது ஆகி அவுணன்

முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்

மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயிற்

குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க,

நன் நரம்பு உடைய தும்புருவோடு

நாரதனும் தம் தம் வீணை மறந்து

கின்னர மிதுனங்களும் தம் தம்

கின்னரம் தொடுகிலோம் என்றனரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

செம் பெருந் தடங்கண்ணன் திரள் தோளன்

தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்

நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்

கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர் !

அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்

அமுத கீத வலையால் சுருக்குண்டு

நம் பரம் அன்று என்று நாணி மயங்கி

நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

புவியுள் நான் கண்டது ஓர் அற்புதம் கேளீர் !

பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து

அவையுள் நாகத்துஅணையான் குழல் ஊத

அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப,

அவியுணா மறந்து வானவர் எல்லாம்

ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்

செவி உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து

கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com