அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ்வாய்ச்

சந்திரன் வெங்கதிர் அஞ்ச

மலர்ந்து எழுந்து அணவு மணிவண்ண உருவின்

மால் புருடோத்தமன் வாழ்வு ;

நலம் திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்

நாரணன் பாதத் துழாயும்

கலந்து இழி புனலால் புகர் படு கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி

அழல் உமிழ் ஆழிகொண்டு எறிந்து அங்கு

எதிர் முக அசுரர் தலைகளை இடறும்

எம் புருடோத்தமன் இருக்கை;

சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளிற்

சங்கரன் சடையினில் தங்கிக்

கதிர் முக மணிகொண்டு இழி புனற் கங்கைக்

கண்டம் என்னும் கடி நகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள

ஏற்று வந்து எதிர் பொரு சேனை

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்

நம் புருடோத்தமன் நகர்தான்;

இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்

இரு கரை உலகு இரைத்து ஆடக்

கமை யுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும்

ஒண் சுடர் ஆழியும் சங்கும்

மழுவொடு வாளும் படைக்கலம் உடைய

மால் புருடோத்தமன் வாழ்வு ;

எழுமையும் கூடி ஈண்டிய பாவம்

இறைப் பொழுது அளவினில் எல்லாம்

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்

கண்டம் என்னும் கடி நகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தலைப்பெய்து குமுறிச் சலம் பொதி மேகம்

சலசல பொழிந்திடக் கண்டு

மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை

மால் புருடோத்தமன் வாழ்வு;

அலைப்பு உடைத் திரைவாய் அருந்தவ முனிவர்

அவபிரதம் குடைந்து ஆடக்

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

விற் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி

மேல் இருந்தவன் தலை சாடி

மற் பொருது எழப் பாய்ந்து அரையனை உதைத்த

மால் புருடோத்தமன் வாழ்வு;

அற்புதம் உடைய ஐராவத மதமும்

அவர் இளம்படியர் ஒண் சாந்தும்

கற்பக மலரும் கலந்து இழி கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

திரை பொரு கடல் சூழ் திண்மதிள் துவரை

வேந்து தன் மைத்துனன் மார்க்காய்

அரசினை அவிய அரசினை அருளும்

அரி புருடோத்தமன் அமர்வு;

நிரை நிரையாக நெடியன யூபம்

நிரந்திரம் ஒழுக்குவிட்டு இரண்டு

கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வட திசை மதுரை சாளக்கிராமம்

வைகுந்தம் துவரை அயோத்தி

இடம் உடை வதரி இடவகை உடைய

எம் புருடோத்தமன் இருக்கை;

தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்

தலைப் பற்றிக் கரை மரம் சாடிக்

கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக்

கண்டம் என்னும் கடிநகரே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்

மூன்று எழுத்து ஆக்கி மூன்று எழுத்தை

ஏன்று கொண்டு இருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய

எம் புருடோத்தமன் இருக்கை;

மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி

மூன்றினில் மூன்று உரு ஆனான்

கான் தடம்பொழில் சூழ் கங்கையின் கரை மேல்

கண்டம் என்னும் கடி நகரே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பொங்கு ஒலி கங்கைக் கரை மலி கண்டத்து

உறை புருடோத்தமன் அடிமேல்

வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க் கோன்

விட்டுசித்தன் விருப்பு உற்றுத்

தங்கிய அன்பால் செய் தமிழ்மாலை

தங்கிய நா உடையார்க்குக்

கங்கையில் திருமால் கழலிணைக் கீழே

குளித்திருந்த கணக்கு ஆமே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com