அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மருமகன்தன் சந்ததியை

உயிர்மீட்டு மைத்துனன்மார்

உருமகத்தே வீழாமே

குருமுகமாய்க் காத்தான் ஊர்;

திருமுகமாய்ச் செங்கமலம்

திருநிறமாய்க் கருங்குவளை

பொரு முகமாய் நின்று அலரும்

புனல் அரங்கம் என்பதுவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கூன் தொழுத்தை சிதகு உரைப்பக்

கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு

ஈன்று எடுத்த தாயரையும்

இராச்சியமும் ஆங்கு ஒழிய,

கான் தொடுத்த நெறி போகிக்

கண்டகரைக் களைந்தான் ஊர்;

தேன் தொடுத்த மலர்ச் சோலைத்

திருவரங்கம் என்பதுவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பெருவரங்கள் அவைபற்றிப்

பிழக்கு உடைய இராவணனை

உரு அரங்கப் பொருது அழித்து இவ்

உலகினைக் கண்பெறுத்தான் ஊர் ;

குரவு அரும்பக் கோங்கு அலரக்

குயில் கூவும் குளிர் பொழில் சூழ்

திருவரங்கம் என்பதுவே

என் திருமால் சேர்விடமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கீழ் உலகில் அசுரர்களைக்

கிழங்கிருந்து கிளராமே

ஆழி விடுத்து அவருடைய

கரு அழித்த அழிப்பன் ஊர் ;

தாழைமடல் ஊடு உரிஞ்சித்

தவள வண்ணப் பொடி அணிந்து

யாழின் இசை வண்டினங்கள்

ஆளம் வைக்கும் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொழுப்பு உடைய செழுங்குருதி

கொழித்து இழிந்து குமிழ்த்து எறியப்

பிழக்கு உடைய அசுரர்களைப்

பிணம் படுத்த பெருமான் ஊர் ;

தழுப்பு அரிய சந்தனங்கள்

தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு

தெழிப்பு உடைய காவிரி வந்து

அடிதொழும் சீர் அரங்கமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வல்எயிற்றுக் கேழலுமாய்

வாள்எயிற்றுச் சீயமுமாய்

எல்லை இல்லாத் தரணியையும்

அவுணனையும் இடந்தான் ஊர் ;

எல்லியம் போது இருஞ்சிறை வண்டு

எம்பெருமான் குணம் பாடி

மல்லிகை வெண்சங்கு ஊதும்

மதிள் அரங்கம் என்பதுவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குன்று ஆடு கொழு முகில் போல்

குவளைகள் போல் குரைகடல் போல்

நின்று ஆடு கணமயில் போல்

நிறம் உடைய நெடுமால் ஊர் ;

குன்று ஊடு பொழில் நுழைந்து

கொடி இடையார் முலை அணவி

மன்று ஊடு தென்றல் உலாம்

மதிள் அரங்கம் என்பதுவே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பரு வரங்கள் அவைபற்றிப்

படை ஆலித்து எழுந்தானைச்

செரு அரங்கப் பொருது அழித்த

திருவாளன் திருப்பதிமேல்

திருவரங்கத் தமிழ்மாலை

விட்டுசித்தன் விரித்தன கொண்டு

இருவர் அங்கம் எரித்தானை

ஏத்த வல்லார் அடியாமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மரவடியைத் தம்பிக்கு வான்பணையம்

வைத்துப்போய் வானோர் வாழச்

செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து

உலகாண்ட திருமால் கோயில் ;

திருவடிதன் திருஉருவும் திருமங்கை

மலர்க்கண்ணும் காட்டி நின்ற

உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட ஓ !

சலிக்கும் ஒளி அரங்கமே.


அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள்

ஆகிலும் சிதகு உரைக்குமேல்

என் அடியார் அதுசெய்யார் செய்தாரேல்

நன்று செய்தார் என்பர் போலும்;

மன் உடைய விபீடணற்கா மதிள் இலங்கைத்

திசை நோக்கி மலர்க்கண் வைத்த

என்னுடைய திருவரங்கற்கு அன்றியும்

மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே?

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com